அன்னையர் தின வாழ்த்து செய்தி
ஒரு நாள் ஒரு தூதன் பரலோகத்திலிருந்து பூமிக்கு அழகான ஒன்றை கண்டுப்பிடித்து
எடுத்து வரும்படி அனுப்பப்பட்டான். பூமியில் வந்து பல காரியங்களைப் பார்த்து
விட்டு கடைசியாக பூத்து குலுங்கும் பூக்களே அழகு என்று சிலவற்றைப் பறித்து எடுத்துக்
கொண்டான். பின்னர் கொஞ்ச தூரம் கடந்து வந்தபோது வழியில் பார்த்த ஒரு குழந்தையின்
சிரிப்பு அவனை கவர்ந்தது. உடனே குழந்தையின் சிரிப்பு அழகு என்று அதையும் எடுத்துக்
கொண்டான். இப்போது பரலோகத்திற்கு புறப்படலாம் என்று எண்ணி புறப்படும் போது ஒரு
மலையடிவாரத்தில் இருந்த குடிசைக்கு வெளியே ஒரு தாய் தன் குழந்தையை அன்போடு மடியில்
வைத்து கொஞ்சுவதைப் பார்த்து மயங்கிப் போனான். உடனே தாயின் அன்பும் அழகு தான்
என்று அதையும் எடுத்துக் கொண்டான். பரலோகத்திற்கு வந்தவன் பரலோகத்திற்குள்
நுழையும் போது பூ வாடிப்போயிருந்ததைக் கண்டு அதிர்ந்துபோய் அதனை ஓரம்
வைத்துவிட்டான். பின்னர் குழந்தையின் சிரிப்பை பார்த்தான் சிரிப்பு அழுகையாகி
இருந்தது, அதிர்ந்து போய் ஓரம் வைத்து விட்டான். எல்லா அழகின் நிலைமையும்
இவ்வளவுதானா என்று சலித்துபோய் தாயின் அன்பாகிய அழகையும் ஓரம் வைக்க சென்றவன்
வியந்துப் போனான், காரணம் மீதமிருந்த தாயின் அன்பாகிய அழகு மட்டும் மாறாமலிருந்தது.
பரலோகமே அந்த தாயின் மாறாத அன்பின் அழகைக் கண்டு வியந்தது.
உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிற இந்நாளில் பிள்ளைகளாகிய
நமக்கு வேதம் என்ன சொல்கிறது என்பதை அறிந்துக்கொள்வோம்:
1).
தாயைப்பார்த்து ஏன் என்னைப் பெற்றாய்
என்று ஒரு நாளும் கேட்கக் கூடாது
(ஏசா. 45:10 தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!). உன்னைப் பெற்றெடுக்கும்படி உன் அம்மா சுமந்த
வலிக்கும், பட்ட கர்ப்ப வேதனைக்கும் கைம்மாறு என்று நீ எதையுமே கொடுக்க முடியாது.
உன்னை உயிரோடு பெற்றெடுக்கும்படி மரணத்தின் விளிம்பை எட்டிபார்த்தவள் உன் தாய். உன்
கண்களில் கண்ணீர் தேங்கினால் அவள் இருதயம் துடிதுடித்து போய்விடும். உன்
கண்ணீருக்கான காரணம் அறிந்து அதை நிவிர்த்தி செய்யும் வரை அவள் துடிப்பு அடங்காது.
எனவே ஒருபோதும் உனது அம்மாவை பார்த்து ஏன் என்னைப் பெற்றாய் என்று கேளாதே.
2).
தாயின் போதகத்தைத் தள்ளாதே (நீதி. 1:8 என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே). நீ நன்றாக இருக்க வேண்டும் என்று அவளை விட இந்த உலகத்தில் வேறு
யாரும் ஆசைப்பட்டிருக்க மாட்டார்கள். அநேக நேரங்களில் நீ பிரச்சனைகளை சந்தித்த
பிறகுதான் உனக்கு அது பிரச்சனை என்றே தெரியும், ஆனால் உன் அம்மாவோ நீ பிரச்சனைகளை
சந்திக்கும் முன்னே உன் பிரச்சனைகளில் இருந்து நீ காப்பாற்றப்பட தீர்க்கத்தரிசியை
போல் உனக்கு போதகம் பண்ணுவாள். உனக்கு எது நல்லது என்பதை உன்னை விட நன்கு
அறிந்தவள் உன் தாயே. எனவே ஒருபோதும் உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
3).
தாய் வயதுசென்றவளாகும் போது அசட்டை
பண்ணாதே (நீதி. 23:22 உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே). உலகத்தில் உனக்கு பெரிதாய் காணப்படும் காரியங்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் பொருட்டு ஒரு போதும் உன் தாயை அசட்டை செய்து முதியோர் இல்லத்தில்
சேர்க்காதே. உன் அம்மா வயதுசென்றவளாகும் போது அவளை சிறு குழந்தை போல் பாவித்து
நடத்து. உன் தாயின் முதிர்வயதில் அவளை நீ சுமப்பது உன் தலைமுறைக்கு ஆசீர்வாதம்.
எனவே உன் தாய் வயதுசென்றவளாகும் போது அசட்டை பண்ணாதே.
இத்தொகுப்பை கேட்கும், வாசிக்கும் அனைத்து பிள்ளைகளும் வேதம்
சொல்லும் இந்த காரியங்களை செய்ய உறுதியேர்ப்போம், ஆசீர்வதிக்கப்படுவோம்.
உங்கள் யாவருக்கும் உங்கள் போதகரின் அன்னையர் தின வாழ்த்துக்கள்

No comments:
Post a Comment